Monday, July 21, 2008

நிறமாலை பொழுதுகள்...

"மேட்டூர்! மேட்டூர்! மேட்டூர்! "

"மேட்டூர் மட்டும் ஏறுங்க. பவானிக்கு முன்னாடி பஸ் இருக்கு போப்பா" - கனத்து ஒலித்து கொண்டிருக்கிறது கண்டக்டரின் குரல்.

எனக்கு என்ன ராசியோ (?) தெரியாது. எப்பவும் கடைசி சீட்டுதான் கிடைக்கும்!அதுல ஒரு சமூக சேவை செய்யலாம், நீங்களும் செஞ்சிருப்பிங்க.

"தம்பி, இந்த பேக் மட்டும் வச்சிருங்க, இறங்கும்போது வாங்கிகறேன்"

"ஹி ஹி பரவாயில்ல கொடுங்க"

"அண்ணா இந்த நோட் புக் இங்க வைக்கிறேன், ஸ்டெப்ஸ்ல தான் இருக்கேன் வாங்கிக்கிறேன்"

"ங்ஹே!" இப்படியாக பல பேருந்து சொந்தங்கள், சேவைகள்.

எப்பா!! ஒரு வழியா பவானி வந்தாச்சி. அப்பிடியே ஒரு 50 பேர் இறங்கி (அப்பாடா) 60 பேர் ஏறுவாங்க (ஹைய்யோ).
ஆனா இன்னிக்குனு பாருங்க அப்பிடி ஏதும் நடக்கல, பவானில கொஞ்சம் பேர்தான் ஏறுனாங்க..
"ஏப்பா! மூட்டைலாம் பின்ன வையிப்பா, கால் சந்துல வச்சுக்கிட்டு"

"இல்லைங்க எல்லாம் கண்ணாடி பாட்டிலு, நான் இங்கியே சீட் கீழ வச்சுகிறேன்"

"தம்பி (நான்தான்) கொஞ்சம் கால அகட்டுங்க"

"ஹம் போதுங்க, வச்சிட்டேன் அப்பிடியே கொஞ்சம் பார்த்துகங்க கீழ உருண்டற போகுது"

"ஹான் சரி சரி பார்த்துகறேன்"

இந்த சம்பவங்கள் முடிந்து பின் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு நான் கேட்டவை தான் இனி வருபவை…
காவிரி வளம் சேர்க்கும் பிரதேசங்கள் என் விழிக்கு எப்போதும் விருந்தளிக்க தவறுவதில்லை. அன்றும் அப்படிதான். கைகளில் தஸ்தயெவ்ஸ்கி யின் "சூதாடி", கண்களில் பச்சை கம்பள கண்ணாடி…

ஒரு பேருந்து நிறுத்தம், வழக்கமாய் உதிர்தலும் புதுப்பித்தலும்.

" அட மாப்ள! எங்க பார்த்து ரெம்ப நாள் ஆச்சுபோவ்!!! எப்பிடி இருக்கற?" - பேருந்தில் ஏறியவர், அந்த பாட்டில் மூடைகாரரிடம் கேட்டது இது.
"அட குமரேசா! வாப்பா. ஹும் அப்பிடியே போகுதுப்பா, இப்ப எங்க வேலைக்கு போயிட்டு இருக்ற. இந்த ரூட்ல வர? -

மூட்டைகாரர்"இங்கதான் மில்லுக்கு போறேன், நீயி? - குமரசேன்

"நான் அந்தியூர்-முக்கு பாய் கடையிலதான் இருக்கேன்"

"சைக்கிள் கடையிலையா? எவ்ளோ தராரு?"

"1800 வா தராரு, அப்புறம் இந்த பாட்டிலு வாங்கி நம்ம அண்ணாச்சி கடையில விக்கறேன். அதுல பாட்டிலுக்கு 1 ரூவா நிக்கும், இந்தா இப்ப ரெண்டு மூட்டை கொண்டு போறேன்"

"நமக்கு சிப்ட்டு கணக்குதான், வாரம் 500 நிக்கும், வரதுன்னா சொல்லு"

"எங்கப்பா நமக்கு மில்லு ஒத்து வராமத்தான், இங்க போயிட்டு இருக்கேன்"

இப்படியாக நீண்ட பேச்சு அவர் மகன் பீடி பிடிப்பதையும் இவர் மகன் பிராந்தி குடிப்பதையும் பற்றிய கவலையில் போய் நின்றது.
"ஹ்ம்ம் என்னமோப்பா வண்டி ஓடுது"
இந்த வார்த்தைகளுக்குள் புதைந்திருக்கும் அர்த்தங்களை தேடினால் அந்த கதை ஒரு முடியாத கதையாகிவிடும்..
"அப்புறம் பாட்டில வித்திட்டு என்ன வேலை?"

"இன்னிக்கு நம்ம பாப்பாவுக்கு "ஹாப்பி பர்த்டே", கேக் வாங்கியாரசொல்லிச்சு"

"அட! அப்ப ஒரே சந்தோசம்தான்"

"ஹ்ம்ம் கேக்-கும், நைட்டுக்கு மசால் தோசையும் வாகிட்டு போகணும் மீதி காசு இருந்தா"

"அப்பிடியே "நம்ம" கடை பக்கம் போயிட்டு அப்புறம் போலாம்பா"

"சும்மா இர்ரா குமரேசா!? வீட்டுக்கு போகணும்"

"சரி நீ போய் பாட்டில போட்டிட்டு வா; நான் கடையில இருக்கேன்"

"அட சும்மா இருப்பா" - பாட்டில்காரர் ஒரு சிரிப்புடனே சொன்னார்

"நான் இன்னிக்குதான் சம்பளம் வாங்குனேன்; பாத்துக்கலாம் வா" - குமரேசன்
"நெரிஞ்சிபேட்டை வெளிய வாங்கப்பா" - கண்டக்டர்

"தம்பி (என்னைத்தான்) கொஞ்சம் கால அகட்டுங்க" - மூடைகளை எடுத்துக்கொண்டார்.
"டேய் நீ போய் கடையில இரு நான் பாட்டில போட்டிட்டு வரேன்"
"போலாம்; ரைட்" - கண்டக்டர்
பாட்டில் விற்ற காசில் கொஞ்சம் நான்காவது பாட்டிலுக்கு போனது பற்றியோ,"ஹாப்பி பர்த்டே" பாப்பா வீட்டில் காத்திருந்தது பற்றியோ, கேக்-கும், மசால் தோசையும் வாங்கப்பட்டதா என்பதெல்லாம் குமரேசனைதான் கேட்க வேண்டும்.

என் கையில் இருந்தா "சூதாடி" ஏனோ ஒரு பக்கம் கூட புரட்டபடவில்லை…
ஜனா கே

4 comments:

Unknown said...

super...ungalukku ulla eppadi oru theramaya....

ஜனா கே said...

Thanks da ratha!!!

Prawintulsi said...

ஜனா....

Itz Amaazing!!!

நம்ம ஏரியா... மக்கள், அவங்க உரையாடல்கள், இயலாமை, அறியாமை... அவங்க ஒருநாள் வாழ்கை எல்லாம் நறுக்குண்ணு சொல்லிட்டீங்க....

நான் இதைத்தான் சொல்ல வர்ரேன்னு இல்லாம...இந்த போற போக்குல எழுதும் நடை நன்றாகவே இருக்கிறது...

தொடர்ந்து எழுதுங்க...

ஜனா கே said...

மிக்க நன்றி பிரவீன்!!!

வாசிப்பின் அனுபவத்தை சொல்லும்போதுதான் எழுத்துக்கள் உயிர்பெறுகின்றன!