Tuesday, July 29, 2008

ரஸ்கின் பாண்ட்

ரஸ்கின் பாண்ட் - யார் இது? அப்பிடின்னா என்ன? என்று கேட்பவர்களுக்கு ஒரு அறிமுகம். பிரிட்டிஷ் இந்தியா காலத்தில் பிறந்த, ஆனால் இந்தியாவை தாய்பூமியாக மனதில் கொண்ட ஒரு வேல்ஸ்- இங்கிலாந்து நாட்டை பூர்வீகமாக கொண்ட, நடந்து செல்வதை விருப்பமாக கொண்ட ஓர் எழுத்தாளர் (நான் இதை எழுதுவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்).
நாவல், சிறுகதை, கவிதைகள், குழந்தை புத்தகங்கள் என பல தலங்களில் இயங்கியவர்.
எல்லாம் சரி, என்ன தீடீர்ன்னு இந்த மாதிரி எழுத ஆரம்பிசுடன்னு கேட்கிறிங்களா?இந்தா வந்துட்டன்.. கொஞ்சம் அப்பிடியே படிங்க உங்களுக்கே புரியும். (வேற வழி!)
இவரை, அனைத்து எழுத்து வகைகளை எனக்கு பிடிக்குமா என்பது வேறு கதை. ஆனால் இவரது புத்தங்களுக்கு யாரையும் முன்னுரை எழுத அணுகியதில்லை, அனுமதித்ததில்லை என்பது எனக்கு மிக்க பிடித்தது. அவர் சொன்ன பதில் "எனக்கு நன்றாக எழுத வரும் என்று எனக்கு தெரியும்; பிறகு எதற்கு முன்னுரை?". தன்னம்பிக்கை!!!

இவரது "சிறந்த சிறுகதைகள்" தொகுப்பை அண்மையில் உள் வாங்கினேன். (இப்ப புரிஞ்சிருக்குமே,- "ஆகா மொக்க போடாத"). கதை சொல்லியாக வரும் பாங்கு இவருடையது. ஆனால் நம்மை கை பிடித்து கூட்டி செல்லாமல், முதுகில் கை வைத்து தள்ளி விடுகிறார். ஆக, படிக்கும் நீங்களே உங்களை பார்த்துகொள்வீர்கள் அந்த எழுத்துவழியாக.

இவரது எழுத்துக்கள் இலக்கிய வகையில் சேராது என்று ஒரு வாதம் நெடுங்காலமாய் இருந்துவருகிறது. எனக்கு அப்பிடி தோன்றவில்லை.புரியாமல், உங்கள் கற்பனைக்கு எட்டாத ஒரு கற்பனையை உவமையாக சொல்லி குழப்பி சொல்வது தான் இலக்கியம் என்று இன்று ஒரு மாயை பரப்பிவிட்டார்கள்.
மக்களின் வாழ்க்கையை - வலியை, துக்கத்தை, சந்தோசத்தை, உணர்ச்சிகளை, தனிமையை, நட்பை, காதலை, வீரத்தை, இப்பிடியாக சொல்லி கொண்டே போகக்கூடியவற்றை செவ்வனே பதிவு செய்வதுதான் இலக்கியம். படிக்கும் பொது நீங்கள் உணரவேண்டும்.

சிறுபிராயத்து, புதுப்பித்து கொள்ள முடியாத ஒரு நட்பைபற்றி ரஸ்கின் சொல்லும்போது நம் ஒவ்வொருவர் உள்ளும் இப்பிடி ஒரு நட்பு புதைந்து கிடப்பதைஉணர்வோம்.

"என் தாத்தாவின் பங்களாவில் நான் இருந்த வருடங்கள் அவை" என்று அவர் சொல்லும்போதே நமக்கு நமது பள்ளிப்பருவத்து கோடை நாட்கள் நினைவுக்கு வந்து போகின்றன.
"அந்த பங்களாவின் பின் ஒரு குட்டை இருந்தது. மழைநீரால் நிரம்பும் வகையிலான குட்டை அது. அங்கே எல்லாம் போவது ஒழுங்கீனமான செயல் என்பது என் தாத்தா வரையறுத்தது. ஆனால் அங்கே போவது தான் என் குறிகோளாக இருந்தது." - அடம்பிடித்தது உங்களுக்கும் ஞாபகம் வருகிறதா? - இடையில கேள்வி கேட்காம கதைய சொல்றான்னு சொல்றது கேட்குது.
அங்கே எருமைகளை குளிப்பாட்ட அல்லது குளிர்விக்க ஒவ்வொரு மதியமும் ஒரு வெயிலால் கறுத்துப்போன என் வயது பையன் வருவான். அவனும் அந்த குட்டையில் இறங்கி நீச்சல் அடிப்பான், எருமையின் முதுகில் சவாரி செய்வான்.மறுநாள் மதியம் நானும் அங்கே போவது என்று முடிவு செய்து கொண்டேன். என் தாத்தா மதிய உணவிற்கு பின் உறங்கிய பின், அந்த குட்டையின் அருகில் போய் அமர்ந்துகொண்டேன் (மதில்சுவரை தாண்டி வரவேண்டும்). வெள்ளை வெளேர் என்ற என்னை பார்த்தும் அவன் என்ன நினைத்தான் என்று தெரியவில்லை," நீயும் வா நீச்சல் அடிக்கலாம்" என்றான். "எனக்கு நீச்சல் தெரியாது" என்றேன்.
"நான் கத்துதறேன்."
மெல்ல என் ஷூ களை கழட்டிவிட்டு கொஞ்சமாய் எட்டி வைத்தேன்.
என்னை பக்குவமாய் நீச்சல் அடிக்க வைத்தான்.அடுத்தடுத்த நாள்களிலும் இது தொடர்ந்து.
நான் வீட்டிற்க்கு வந்து யாருக்கும் தெரியாமல் குளித்துவிட்டு, சமர்த்தாய் இருந்துவிடுவேன்.
அவனுக்கு எழுத,படிக்க தெரியாது. எருமை மேய்பதும், பறவைகளை பற்றியும் நன்றாக தெரிந்து வைத்திருந்தான்.
நான் கிளம்ப வேண்டிய நாள் வந்தது. என் தாத்தாவோடு கிளம்பிகொண்டிருகிறேன்.நான் குட்டை பார்க்க செல்ல வேண்டும் என்று சொல்ல முடியாது. ஆக, அவனிடம் சொல்லிகொள்ளமலே கிளம்புகிறேன்.இன்றும் என் நினைவில் இருக்கிறது அந்த குட்டையும், அவனும்.
இதை நான் எழுதும்போதும் அவனுக்கு படிக்க தெரியாது. எனக்கு நீச்சல் கற்று கொடுத்தவனுக்கு, நான் ஏதும் கற்றுகொடுத்தேனா" என்னை தேடி இருப்பானா? நான் யாரிடமும் கேட்க முடியாது. எங்கள் நட்பு எனக்கும் அவனுக்குமே தெரிந்தது.

அவ்வளவு தான், இப்போது சொல்லுங்கள் இது என்ன வகை எழுத்து என்று.

ஜனா கே

No comments: