Monday, January 20, 2014

அன்புள்ள அதிகாரிக்கு

அன்புள்ள அதிகாரிக்கு

“டேய் …க்காளி
அடிச்சுப் பேத்துருவேன்
என்ன பெரிய இவனா நீ
தோ பார்!
இதெல்லாம் வேற எவன்டியோ வச்சுக்கோ
என்னால பண்ண முடியாது
என்னா பண்ணுவ நீ!”
வார்த்தைகள் தேநீரில்
கொதித்துக் கொண்டிருந்தன
இரண்டு கோப்பைத் தேநீரும்
பத்துத் தீக்குச்சிகளும் தீர்ந்த பின்,
“யா! இன்னும் ஒன் ஹவர்ல
மெயில் பண்றேன்”
வார்த்தைகள் வெளியில் வந்தன.

சவளை குடியானவனின் வளமை தேசம்
கருமை ஏறிப்போன இரவில்
வெறியேறித் துடிக்கும் விரல்கள்
தட்டும் ஒவ்வொரு பொத்தானிலும்
செத்து விழுவர் ஒவ்வொருவர்
கிளம்பிப் போகும் முன்
சிதறிக் கிடக்கும் குப்பைகளோடு
கூட்டி எடுத்துக் கொட்டிவிட்டுச் செல்வர்
சிதறிய கெட்ட வார்த்தைகளையும்
அடுத்த பகலில்
சபையில் வீற்றிருப்பர்
அமைச்சர்கள் மற்றும் அரசர்கள்!
நாட்டின் வளமை பற்றி
சொல்லிக்கொண்டிருப்பான்
குருதியும் குண்டியும் சுண்டிப்போன
சவளைக் குடியானவன்

இன்று விடிகாலை மிதமான மழை பெய்திருந்தது
குளித்துத் தலை உதறிய
ஈரத்துடன் நின்றிருந்தன
புளியமரங்கள்
இரவைப் பிழிந்து கொட்டிவிட்டபடி
பளீர் தார்ச்சாலை
“வாங்க பாஸு” டீ மாஸ்டரின்
சந்தோசம் என் மீதும் தெறித்தது
மொறுமொறுப்பான மசால்வடைகள்
தின்ன அழைத்தன ஐந்து மணிக்கே
நான்கு மணிக்கு வீட்டில்
விளக்கு எரிந்தது பற்றி
நக்கல் பேசி இருந்தனர்
பேருந்துக்குக் காத்திருந்த
தினக்கூலிகள்
போர்வையை பிழியாமல் உதறியபடி
கெட்ட வார்த்தையால் திட்டிக்கொண்டே
பிச்சைக்காரர்கள்
சாந்தமாய் அசைபோட்டுகொண்டிருந்தன
பொதிகாளைகள்
எப்போதும் குரைக்கும்
குட்டிநாயோடு சேர்ந்து
வாக்கிங் பெண்ணும் குறுநகை
புரிந்தாள்
இன்று விடிகாலை
மிதமான மழை பெய்திருந்தது
*
உயிரோசையில் வெளியானது: http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=1509

No comments: