Monday, January 20, 2014

அது அன்று அப்படி வந்தது

வாழ்வின் ஆழத்திலிருந்து
எழுந்து வந்த மனிதன்
அம்மணமாய் இருந்தான்
அசிங்கமாய் இல்லை
என் முன்னால் அமர்ந்து
எனக்காக ஒரு தேநீர் போடச்சொன்னான்
மிகவும் ரசித்துப் பருகினான்
“பாம்புகள் துரத்தும் பரமபதத்தில்
ஏணிகளை மாற்றி வைக்கும்
தந்திரக்காரன் நீ!
புணரும் முன் அவ்வளவு பொய் சொன்னவன்
முடிந்தவுடன் உத்தமன் என்கிறாய்!
தீப்பெட்டி கையிலிருந்தும்
கொளுத்தாமல் நிற்கிறாய்
இருள் பிடிக்குமென
எவனோ சொன்னதற்கு!
இந்த ஆடைகளைப் பார்
எவ்வளவு அழுக்கு
கழட்டிப்போடு!” என்றான்.
அம்மணமாகிவிடுவேன்,
அசிங்கமாகிவிடும்.
நானென்ன அசிங்கமாகவா இருக்கிறேன்?
இல்லை! எனக்கே கொஞ்சம்
அருவருப்பாய் இருக்கிறது
இருப்பினும் இப்படியே
என்னால் வெளியே செல்ல முடியாது.
சரி! இங்கே தற்கொலை செய்துகொள்ள
ஒரு இடம் கிடைக்குமா?
நான் உள்ளறையைக் காட்டினேன்
போய் முயற்சிசெய்!
சொல்லிவிட்டு வாழ்வின்
ஆழத்திற்கே சென்றுவிட்டான்

உயிரோசையில் வெளியானது: http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=1899

No comments: