Monday, September 22, 2008

மறைந்த கனவுகள்

நீரின் மேற்புறம் சற்றே
சலனப்பட்டதும்
சரக்கென ஆழம் செல்லும்
மீன்குஞ்சுகளாய்

விழிக்கும் நொடியில்
மறைந்துபோகின்றன
என் தூக்கத்தின் மேல்
நடந்த கனவுகள்

ஜனா கே

Thursday, September 18, 2008

பூப்பூத்த மனது

blank_page

பூபெய்திய பெண்ணின்
முதல் பயமும்
அனுமானங்களும் போல

யாரைக் கேட்பது
எனத் தெரியாமல்
வெட்கப்பட்டு நிற்கும்
முதலாய் காதல்வயப்பட்ட மனது

ஜனா கே

தில்லியில் வைத்த கொள்ளி

அன்புமொழி பேசியிருந்த
அந்த இணைகளுக்கு
தெரிந்திருக்குமா?

இலக்கியம் பேசியிருந்த
எம் தோழர்கட்கு
தெரிந்திருக்குமா?

காலாற நடந்திருந்த
அந்த வயோதிகர்களுக்கு
தெரிந்திருக்குமா?

பலூன் விற்றிருந்த
அந்த சிறுவனுக்கு
தெரிந்திருக்குமா?

அது மாலைபொழுதல்ல
மரணப்பொழுதென்று
காலன் குப்பைதொட்டியில்
கண்ணடித்து கொண்டிருக்கிறான் என்று

கடித்து குதறி
கடைவாயில் குருதிவழிய
பசி தீர்த்துகொண்டன
தீவிரவாத ஓநாய்கள்

யாது செய்து
தீது கொல்ல?
சொல்லடி பராசக்தி

தெய்வம் நின்று கொல்லுமாம்
யாரை? எப்போது?
கடவுளிடம் பேசுவோர்
யாரேனும் கேட்டுச்சொல்லுங்கள்

ஜனா கே

Wednesday, September 10, 2008

என் பிரியமே...

மென் சோகம் தங்கிய
குவளை மலர் விழிகளும்
அதன் குத்திக் கிழிக்கும்
பார்வையும்

ஈட்டி கூர் நாசியும்
அதன் நுனியில் மினுக்கும்
சிறு கோபமும்

உலர்ந்த திராட்சை உதடுகளும்
அதன் ஓரம் கசியும்
அலட்சிய சிரிப்புமாக

என்னை அடித்து வீழ்த்தி
இதயம் பறித்து
இழுத்துச் செல்கிறாய்
ஏதும் சொல்லாமலே
உனக்கு தெரிந்தோ தெரியாமலோ

தெரிந்தே செய்யினும்
தெரியாமல் செய்தேன்
என்றே சொல்லிவிடு
பாவம்,
பிழைத்துப் போகட்டும் காதல்

ஜனா கே

காற்றில் விழுந்த பூ.

என் நண்பனுக்காய் சில வரிகள், அவன் மொழியில் வலியில்...


பன்னீர் புஷ்பத்தை

முகர்ந்து பார்த்துவிட்டு

கசக்கி எறிந்தாய் நீ!


பொறுக்கி எடுத்து

புனிதப்படுத்திய -


காற்றும் இசையுமான,

மழையும் குளுமையுமான,

இதயத்தின் துடிப்புமான

என் நட்புகள் போதும்.

நெஞ்சம் முழுதும்

பனித்துளியின் தூய்மைகொண்ட

ஈரம் நிறைந்த

என் அன்னையின் பாசம் போதும்


என்கையை இறுகப்பற்றி

மடிந்துபோகும் செடியின்

வேருக்கு நீரூற்றுவதாய்

ஆற்றுப்படுத்தும்

எந்தையின் நேசம் போதும்


மறந்துவிடாதே,

கசக்கிப் போட்ட மரணவலியிலும்

பூ உனக்காக சொரிந்தது

அதன் தேன் துளியைத்தான்

என்பதை

ஜனா கே

Monday, September 8, 2008

கலைந்த வண்ணங்கள்...

ஒரு பைத்தியக்காரானின் கந்தலாடையாய்

நீ கிழித்துவிட்டுப்போன

என் மனது


நீயே திரும்பி வந்தாலும்

திருப்பிதர முடியாது

என் வண்ணங்களையும்

என் தூய்மையையும்

நீ எப்போது வரினும்

முழுமையாய் திருப்பித்தருவேன்

என் காதலையும்

உன் முத்தங்களையும்

ஜனா கே

Monday, August 11, 2008

போதும் எனக்கு...

சடசடவென ஆரம்பித்து
சட்டென நிற்கும் மழைக்குபின்
செம்மண் கொடுக்கும்
வாசத்திற்குநிகரான சுகந்தம்
வேறெதுவும்தருவதில்லை
-------------------------------------------------------------
ஒரே நாள் பிஸ்கட் உண்ட
பெட்டிகடை நாய்குட்டி
என் கைநக்கும் ஈரம் தரும்
மகிழ்ச்சியை போல்
வேறெதுவும் தந்ததில்லை
--------------------------------------------------------------
நீ எனை கை விட்ட
அந்த பனி இரவின்
அடர்த்தி போல்
நீளம் போல்
வேறெதுவும் இருந்ததில்லை

அந்த கடுன்குளிருக்கான
வெப்பத்தை என் செல்லநாயின்
கண்ணீர்போல்
எந்த கம்பளியின் கதகதப்பும்
தேநீரின் சூடும் தந்ததில்லை.
----------------------------------------------
ஓர் இறுகிய கணத்தைஇதமாக்க,
குளிர்ந்த தென்றலும்
சிறு மலரும்
போதாமல் இருந்ததில்லை.
ஜனா கே