Monday, January 20, 2014

நள்ளிரவில் உலவும் புலிகள்

எல்லோரும்  உறக்கத்திற்கு ஆயத்தமான பிறகு
நான் வெளியே செல்வேன்
ஒரு அணைக்கப்பட்ட கைவிளக்கோடு…
விசையை சுண்டி
நெருப்புசுவாலையைப்  புகைப்பானில் பொருத்தும்போது
மிகுந்த எச்சரிக்கையுடன் வெளியே வரும் அந்த ப் புலி…
வனாந்திரத்தின் எதிரில் உள்ள எனது வீட்டில்
அந்தப் புலியுடன் நான் கொண்ட சிநேகம்
எனக்கும் நள்ளிரவிற்கும் மற்றும் அந்தப் புலிக்கும் மட்டுமே தெரியும்
தனது முன்னங்காலை நாவால் எச்சில்படுத்தி
கண்களின் பீளையையோ கண்ணீரையோ துடைத்தபடி
எனக்கு முன்னே வந்து அமரும்
இருவரும் வெகுநேரம் பேசி இருப்போம்
எங்கள் இருப்புபற்றி
எங்களின் கடந்தகால வாழ்வுபற்றி
கண்களில் பற்றிஎரிந்த சுவாலை பற்றி
எங்களின் கட்டற்ற மூர்க்கம்பற்றி
நாங்கள் எப்படி நரிகளை ப் பின்னங்காலால்
அனாயாசமாக எக்கி உதைத்தெரிந்தோம் என்பதுபற்றி
நாங்கள் எப்படி அடிமையாய் மாறிப்போனோம் என்பதுபற்றி
இப்போது எங்களைப் பிடித்து தொங்கும்
இந்த தனிமையைப்பற்றி
விடியலில் நரிகள் விழித்தெழுந்து
பாசம் வழியும் கண்களோடு
எங்களை நோக்கி வர ஆயத்தம் ஆகும்போது
சுவடுகளை அழித்துவிட்டு
மிகுந்த தந்திரமுடன்
யாவரும் அறியாமல் எங்கள் படுக்கைகளுக்குள்
உறங்கப்போவோம்
கடைசியில் ஒன்று சொல்கிறேன்
எனக்கு இதுவரை புலியின் பாசை தெரியாது
புலிக்கும் அப்படியே என்றுதான் நம்புகிறேன்
ஆனால் நாங்கள் இதைதான் பேசிக்கொண்டோம்
என்பதை நான் திண்ணமாகக் கூறுவேன்
ஏனெனில், நள்ளிரவிற்குப் பிறகு
யாவரிடமும் பேசிக்கொள்ள
இதைத்தவிர வேறொன்றும் இல்லை!!!

உயிரோசையில் வெளியானது: http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4285


No comments: