Monday, January 20, 2014

சாமக்குரங்கின் இசையழகி

சாமக்குரங்கின் இசையழகி
இசையோடு கூடிய பாடலின்
குரல் மட்டும் பிரிந்து வந்து
என் காதுகளைக் கடித்தபடி
வந்து கொண்டே
இருந்தது…
குடுகுடுப்பைக்காரன் விட்டுச் சென்ற
வசீகர ஒலியென…
உறக்கத்திற்கு சற்றுமுன்
என் அருகில் படுத்திருந்தது!

ஒரு கடவுச்சொல் வேண்டும்
“இதையெல்லாம் கடந்துபோக
ஒரு கடவுச்சொல் வேண்டும்
பகிரமுடியா கரும்பொழுதுகளை
நுகரமுடியா நுண்வாழ்க்கையை
நட்பெனப்படாத நட்புகளை
நட்புமட்டும் கேட்கும் காதலிகளை
காதல் மட்டும் கேட்கும் தோழிகளை
அடிமைவாசம் அடிக்கும் சம்பளத்தை
பிச்சை எடுக்கும் குழந்தைகளை
செத்தபிறகும் சிதைக்கப்படும் யோனிகளை
கொட்டடியில் தட்டப்படும் குறிகளை
இலக்குகள் அற்ற கவிதைகளை
கவிதைகள் பிறக்காத நிகழ்வுகளை
காகங்கள் கரையாத காலைகளை
சிறுபிள்ளைகள் விளையாடாத மாலைகளை

தலைவனின் சகிக்க முடியா பணிவை
ஓநாய்களின் பாசம் வழியும் கண்களை
கடந்துபோக ஒரு கடவுச்சொல் வேண்டும்,
சொல்லுங்கள் தியானம் செய்பவரே”
“மனம்பிறழ்ந்து போ அல்லது மரணம் தழுவு”
“அதெல்லாம் முடியாதுங்க”
“கடந்து போ அல்லது கலகம் செய்”
“என்னங்க முன்ன சொன்னதயே
வேற மாதிரி சொல்றீங்க?”
“இல்லையெனில், என்னோடு வந்து தியானம் செய்!”
“போய்யா… டவுசரு…”

உயிரோசையில் வெளியானது: http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=1417

No comments: