Monday, January 20, 2014

ஒரு வானம்பாடியாய் இருப்பது அவ்வளவு எளிதானதன்று

வானம்பாடியாய் இருப்பதற்கு முதலில் ஒரு தகுதி வேண்டும்,

கூண்டுக்குள் அடைபட்டிருக்கக்கூடாது.

கண்டதை எல்லாம் உண்ணும் பழக்கம் அதற்கு கிடையாது.

தேர்ந்த தேர்ந்தெடுத்த உணவுகளை

மிகவும் கவனமாக விழிப்புணர்வோடு உண்ணும் பழக்கம் கொண்டது.

முக்கியமாக பறவை என்ற வகையில்

அதனை கிளியோடு எப்போதும் ஒப்பிட்டுவிடக்கூடாது.

அதன் பாடல்கள் மிகுந்த செறிவும் சரியான உணர்வும் கொண்டவை

எல்லா இடங்களிலும் எல்லா பாடல்களையும் அது பாடுவதில்லை.

அதனினும் முக்கியமாக

யாருடைய பாடல்களையோ சொற்களையோ

அது தன்குரல்வழி சொல்வதுமில்லை.

வானம்பாடியின் பாடல்கள் மிகுந்த தனித்துவம் கொண்டவை.


முதலில் அது பசுமை கொண்ட; வசந்தம் வீசும்,

நச்சுகலவாத காற்றுகொண்ட நிலங்களின்மேல் பறந்துசென்று

அதனதன் குணாதிசயங்களை

தனது ஒவ்வொரு சிறகசைப்பிலும் நெஞ்சோடு சேகரிக்கிறது.


பிறகு கண்களை மூடி

உயிர்கள் வாழ தகுதியற்ற ஆனாலும்

மிகுந்த நம்பிக்கையுடன் வாழும் மனிதர்களும்

அவர்களின் நாய்களும் இருக்கும் நிலம்வரை

பறந்து சென்று

அவர்களின் அவலங்களை போராட்டங்களை

நம்பிக்கைகளை மிகவும் கவனமாக

தன் கண்களின் வழி

நிழற்பட நியாபகங்களாய் மூளையில் பதிந்து எடுத்துவருகிறது

தனது கூட்டிற்கு.



இப்போது பல்வேறு நிலங்களின் பாடுகளையும்

மிகுந்த கவனமுடன் பகுப்பாய்வு செய்கிறது.

செறிந்த சொற்களில் சரியான உணர்வுகொண்ட

தனித்தனியான பாடல்களை பாடிப்பார்க்கிறது.

மிகுந்த கவனமுடன் சரியான உணவெடுத்துக்கொள்கிறது

அடுத்த சில நாட்களுக்கு.


இப்போது வசந்தம் வீசும் நிலத்தின் மேல் பறந்து சென்று

மிகச்சரியான பாடலொன்றை

எல்லோரும் குழுமி இருக்கும் ஒரு சதுக்கத்தில்

தனது இனிமையான குரலெடுத்து

கருப்புநிலத்தின் அவலங்களை தெளிவாகப்பாடத்தொடங்குகிறது…

அந்த பாடல் இப்போது எல்லா நிலங்களின் வானத்திலும் பறந்துசெல்கிறது



வானம்பாடிக்கு தெரிந்தே இருக்கிறது அதனால் முடிந்தது

இந்த பாடலை சரியாகப்பாடுவது மட்டும்தான்


ஆனாலும் அதன் உழைப்பு அபாரமானது

முனைப்பு தன்னலமற்றது

சுயத்தில் தெளிவானது

அதன் முயற்சி மிகுந்த அபாயம் கொண்டது.


அதனால்தான் சொல்கிறேன்,

ஒரு வானம்பாடியாய் இருப்பது அவ்வளவு எளிதானதன்று…


உயிரோசையில் வெளியானது: http://www.uyirmmai.com/uyirosai/ViewIndex.aspx?eid=306&edtypeid=2

No comments: