Monday, January 20, 2014

இரண்டு கவிதைகள்

கதவுகளில் வாழ்ந்த பறவைகள்

சாத்தப்பட்ட கதவுகளின் முன் நிற்கும்போதெல்லாம்

உள்ளிருந்து ஒலிக்கிறது கீகீ என்ற பறவையின் குரல்
ஆனாலும் கதவுகளால் தான் வாழ்கின்றன
எலெகட்ரானிக் பறவைகள்
கதவுகளில் வாழ்ந்த பறவைகள்
பற்றி குறிப்புகள் ஏதும் இல்லை

நிர்வாணம்

நிர்வாணம் பற்றி பேசுபவளை  ஒருவனுக்கும் பிடிப்பதில்லை
நிர்வாணம் பற்றி பேசுபவனை ஒருத்திக்கும் பிடிப்பதில்லை
நிர்வாணம் பற்றியே பேசும் இருவர் சேர்ந்து இருப்பதில்லை
இங்கு நிர்வாணம் பற்றி யாருக்குமே தெளிவில்லை



உயிரோசையில் வெளியானது: http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=2530

புல்வெளியில் கால்நனைப்பவை பனித்துளிகள் அல்ல

ஆகச்சிறந்த நிலக்காட்சி ஓவியம் போல இருந்தது.
அந்தப் பரந்த பசுமைப் பள்ளதாக்கின் ஒருமுனையிலிருந்து
தூரத்தில் நிற்கும் ஒற்றைமரம் நோக்கி
உன்கொலுசுகள் தெரிய
தங்கநிறசரிகை கொண்ட பாவாடையை
சற்றே தூக்கிப்பிடித்தபடி
நீ நடக்கத் தொடங்கியபோது.

அந்த குளிர்நிறைந்த இரவில்தான்
உன்வீட்டில் எல்லோரும் உறங்கியபின்
வரச்சொல்லி இருந்தாய்.

அந்த நாளில் உன் வீட்டில்
எல்லாரும் உறங்குவார்களா எனத்தெரியாது
இரவு கவிழ்ந்தவுடன் காத்திருக்கத்தொடங்கினேன்
நீ என்ன சொல்வாய் என எனக்குத் தெரிந்தே இருந்தது
நான் என்ன செய்வேன் என்றும் உனக்குத் தெரிந்தே இருந்தது.
அப்புறம் எதற்கு இந்தப் பாசாங்குகள்.
தெரிந்தே இருப்பினும் சொல்லப்படாதவரை
சொற்களுக்கு அர்த்தமில்லை. உணரப்படாத முத்தம் போல

வந்தாய். நின்றாய்.சொன்னாய்.
மிக்க அமைதியுடன் பார்த்துக்கொண்டிருந்தது நிலவு.
என்னிடம் வார்த்தைகள் இல்லை.
ஆகாயத்திற்கும் புல்வெளிக்கும்
இடையிலான வெறுமை முழுதும்
என்னிடம் இருந்தே நிரம்பியதாக
விம்மிக்கிடந்தது நெஞ்சம்.

திரும்பி நடக்கத் தொடங்கினாய்
ஒரு தொல்கனவென.
உனக்குத் தெரிந்தே இருக்கும்
என்ற நம்பிக்கையில்
சொல்லாமல் விட்டேன்
நீ நடந்து செல்லும் புல்வெளியில்
உன் கால்நனைப்பவை பனித்துளிகள் மட்டும் அல்ல.

உயிரோசையில் வெளியானது: http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=3989

விகடனில் வெளியான கவிதைகள் -2

மீதமிருக்கும் உயிர்


பள்ளிவிட்டுச்செல்லும் சிறுமி
மதிலோர வேம்புத்தளிர்மேல்
ஊற்றிச்செல்லும்
புட்டித் தண்ணீரின் மீதத்தில்
உயிர்வாழ்கிறது உலகம்

இனிய இரவில் சில வருத்தங்கள்

அதிவேக பேருந்தின்
முன்னால் பறந்து சென்ற
சொற்கள் எல்லாம் உள்வந்து
விழுந்தன,
‘மெசேஜ் சென்டிங் பெயில்டு’
காலையில் கூட்டும்போது
செத்துக்கிடந்தன இனிய இரவுகளும்
சில முத்தங்களும்.
துடித்துக்கொண்டிருந்தன

சில வருத்தங்கள் மட்டும்.

விகடனில் வெளியான கவிதைகள் -1

மழை

அந்த நிழற்குடையின் கீழ்
மழையில் நனைந்த அனைவரும்
நெருக்கிக்கொண்டு நிற்கிறோம்
மழை விட்டு கலைந்தபோதுதான்
கவனித்தேன்,
என் இடப்புறம் நின்றிருந்தவர்
கையில் மடிக்கணினி இருந்தது
வலப்புறம் நின்றிருந்தவர்
கையில் திருவோடு இருந்தது
என் கையில் மழை இருந்தது

ஜீவகாருண்யம்

“எஜமானி குழந்தைபெற்றுவிட்டாள்”
டைகரும், ரோஸியும் கிசுகிசுக்கின்றன
சந்தோசமாக வால்களை ஆட்டியபடி!
அக்கம் பக்கத்து மனிதர்களை
அன்று மட்டும் முறைக்காமல்
வாலாட்டி வரவேற்றுக்கொண்டே இருந்தன
வீட்டு மனிதர்களை போலவே!
கவிதைப் புத்தகங்களை
கலைத்துப்போட்டு விளையாடுகிறாள்
சின்ட்ரெல்லா.

மழலை மழை

“பாப்பா கவிதை படிக்கறீங்களா
எந்த கவிதை பிடிச்சிருக்கு சொல்லுங்க!”
எனக் கொஞ்ச
பால்பற்கள் தெரிய “ப்ப்பூவா…” என
புதுக்கவிதை  ஒன்றை சொல்கிறாள்
அவ்வளவு ரம்யமாய் இருக்கிறது
ப்ப்பூவா கவிதைகளின் இசை

இசை வீடு

கருப்பு வெள்ளை கற்கள்
பதிக்கப்பட்ட வீட்டில்
கொலுசுமணிகள் சிணுங்க
தத்தித் தத்தி நடக்கையில்
பிரியாகுட்டியின் வீடு
பியானோ வீடாகிறது

அடுக்குமாடி குடியிருப்பு

அந்த அடுக்குமாடி குடியிருப்பின்
வாகனங்கள் நிறுத்துமிடத்தில்
சொற்ப எண்ணிக்கை கூடி இருந்தது.
பக்கத்து வீட்டின் ஜன்னலில்
தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருந்தது.
மெல்லிய விசும்பல்கள் எழுந்தன.
லேசான சலசலப்புக் கேட்டது.
எதிர்புறம் உள்ள சாலை
எப்போதும் போல் ஆனது.
தண்ணீர்விட்டுக் கழுவியதில்
சிதறிய ரோஜா இதழ்களும்
ஒரு தலைமுடியும் சேர்ந்துபோனது.
செய்திகள் பார்க்கவென
யாராலோ குறைந்த ஒலியுடன்
தொலைக்காட்சி போடப்பட்டது.
இன்று இந்த வீட்டில்
மிக்க நாகரீகமாக
ஒரு இழவு நடந்தேறியது.

பிங்-பாங் வார்த்தைகள்


பிங்-பாங் வார்த்தைகள்
உணர்ச்சிகளுக்கேற்ற சொற்கூட்டங்களை
நதியடியின் கூழாங்கற்களைப் போல
நாவினடியில் இளைப்பாறவிடுங்கள்
நம் விவாதங்களில் நம்மிடையே அவை வேலை செய்யட்டும்.
தட்டையான வார்த்தைகளை நீங்கள் சொல்லும்போது
வழவழப்பான ஒரு அட்டைப்பூச்சியை நெருங்குவதைப் போல
அதை நெருங்கிவர மிகவும் அசூயையடைகிறேன்.
அந்த இடைவெளியில்
என்னையொரு ஆமையென எண்ணி
என்னைவிட்டு விலகிப் போய்விடுகிறீர்கள்.
பிறகு என் சொற்களோடு நான் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறேன்
மனம் பிறழ்ந்தவனென என்னைவிட்டு முற்றிலுமாக விலகிப்போகிறீர்கள்
மிகுந்த பயமுடன்.
நான் முன்னிலும் தீவிரமாக சொற்களை சேர்த்துக்கொண்டு
மிகுந்த வன்மமுடன் கவிதை எழுதுகிறேன்
உலகத்தை பிங்-பாங் பந்தென சுவற்றில் எறிந்தபடி


கவிதைக்கு வெளியே ஏதோ இருக்கிறது
கவிதைக்கு வெளியே தனிமை தலைநீட்டி உங்களைப் பார்த்துக் கத்தும்போது
நீங்கள் மிகவும் பயந்துபோய் நெருங்கிவரத் தயங்குகிறீர்கள்.
ஓங்கி ஒருமுறை அதை நீங்கள் அடித்திருந்தால்
இந்நேரம் அது செத்துப்போயிருக்கும் இந்த வரிகளோடு சேர்ந்து.

பகல் முழுதும்
என் தோள்களைச் சுற்றிக்கொண்டே திரியும் அந்த வேதாளம்
நள்ளிரவிற்கு மேல் நீருக்குள் அமிழ்ந்துபோவதென
இருட்கடலோடு இரண்டற கலந்துவிடுகிறது
பிறகு கடல் என்னைச்சுற்றி அலையடித்துக்கொண்டிருக்கிறது.

அந்த புட்டியை உள்ளங்கையில் வைத்து உருட்டியவாறே
கருப்புநிற தொலைபேசியை எடுத்து எண்களை சுழட்டுகிறேன்
முன்னும் பின்னுமாய் உருண்டு சுழல்கிறது உயிர்.
அதோ அந்த இரண்டு வீடுகளுக்கு இடைப்பட்ட மிகவும் குறுகலான பாதையின்
இருமருங்கிலும் நின்றிருக்கும் பாதுகாப்பு அரண்களின் வேர்களில்தான்
வாழ்ந்திருக்கிறது வீடுகளின் தனிமை.

நன்றி உயிரோசை : http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5207 

Monday, September 22, 2008

மறைந்த கனவுகள்

நீரின் மேற்புறம் சற்றே
சலனப்பட்டதும்
சரக்கென ஆழம் செல்லும்
மீன்குஞ்சுகளாய்

விழிக்கும் நொடியில்
மறைந்துபோகின்றன
என் தூக்கத்தின் மேல்
நடந்த கனவுகள்

ஜனா கே

Monday, August 11, 2008

போதும் எனக்கு...

சடசடவென ஆரம்பித்து
சட்டென நிற்கும் மழைக்குபின்
செம்மண் கொடுக்கும்
வாசத்திற்குநிகரான சுகந்தம்
வேறெதுவும்தருவதில்லை
-------------------------------------------------------------
ஒரே நாள் பிஸ்கட் உண்ட
பெட்டிகடை நாய்குட்டி
என் கைநக்கும் ஈரம் தரும்
மகிழ்ச்சியை போல்
வேறெதுவும் தந்ததில்லை
--------------------------------------------------------------
நீ எனை கை விட்ட
அந்த பனி இரவின்
அடர்த்தி போல்
நீளம் போல்
வேறெதுவும் இருந்ததில்லை

அந்த கடுன்குளிருக்கான
வெப்பத்தை என் செல்லநாயின்
கண்ணீர்போல்
எந்த கம்பளியின் கதகதப்பும்
தேநீரின் சூடும் தந்ததில்லை.
----------------------------------------------
ஓர் இறுகிய கணத்தைஇதமாக்க,
குளிர்ந்த தென்றலும்
சிறு மலரும்
போதாமல் இருந்ததில்லை.
ஜனா கே